திருநெல்வேலி: 108 வைணவ திவ்ய தேசங்களில் பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றானது திருக்குறுங்குடி. இங்கு சுவாமி நின்ற நம்பி இருந்த நம்பி கிடந்த நம்பி என 3 திருநாமங்களில் தனித் தனி சன்னதிகளில் ஒரே கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.உற்சவர் சுந்தர பரிபூரண நம்பி.
ஆழ்வாரின் அவதார தினமான கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமான இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. உற்சவர் சுந்தரபரிபூரண நம்பிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிரபந்த பாராயணம் நடந்தது. அதனை தொடர்ந்து, அர்ச்சகர்கள் கோயில் மரியாதையுடன் முழங்க திருமங்கை ஆழ்வார்க்கு திருவரசுக்கு வந்தனர்.அங்கு ஆழ்வார்க்கு மாலை மரியாதைகள் அணிவிக்கப்பட்டு அர்ச்சனை நடந்தது.ஆழ்வாரின் வாழித்திருநாமம் கூறப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் கோயில் உள்வீதி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும் ஆழ்வாருக்கும் ஒரு சேர கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீஇராமானுஜம் (சடா) மலர்மாலைகள் கொண்டுவரப்பட்டு ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.
திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயர் சுவாமிக்கும் மரியாதை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை அழகிய நம்பி ராயர் தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.