நாகப்பட்டினம்: "மாண்டஸ்'' புயலால் நாகைக்கு "ரெட் அலார்ட்'' கொடுக்கப்பட்டாலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பயம் வேண்டாம். மீடியாக்கள் பயமுறுத்த வேண்டாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்,"மாண்டஸ்'' புயலாக உருவானதையடுத்து, நாகை மாவட்டத்திற்கு "ரெட் அலார்ட்'' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரக்கோணத்தில் இருந்து 4 வது தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 25 வீரர்கள் நாகையில் முகாமிட்டுள்ளனர் . தேசிய மீட்பு குழுவினரை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் ஆலோசனை நடத்தினார். பின் கலெக்டர் கூறுகையில், கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வி.ஏ.ஒ.,க்கள், ஊராட்சி செயலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
144 சமுதாயக் கூடங்கள், பள்ளிகள்,12 புயல் பாதுகாப்பு மையங்கள்,5 பல்நோக்கு மையங்கள்,29 தானியங்கி முன்னெச்சரிக்கை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. பொதுமக்கள் கட்டுப்பாடு மைய கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் பயப்பட வேண்டாம். மீடியாக்கள் பயமுறுத்த வேண்டாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.