வேலுார்: தமிழக - ஆந்திரா மாநில எல்லையில், சாலையின் குறுக்கே யானைகள் கூட்டம் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து தமிழகம் வழியாக கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக சென்று கொண்டுள்ளது. இந்த யானைகள் கூட்டம் வழி தவறி இன்று காலை 8:00 மணி முதல் வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக - ஆந்திரா மாநில எல்லையான சைனகுண்டா பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே நின்று கொண்டுள்ளது. சைனகுண்டா- குடியாத்தம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
இதனால் மோர்த்தானா, தனகொண்டபல்லி, சைனகுண்டா ஆகிய கிராமங்களில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு செல்லும் காய்கறி லாரிகள் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து குடியாத்தம் வனத்துறையினர் கூறியதாவது: எப்படி செல்வது என தெரியாமல் சைனகுண்டா சாலையில் யானைகள் பல மணி நேரமாக நின்று கொண்டுள்ளது. இதனை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனால் 100 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம், சித்துார் வழியாக காய்கறி லாரிகள் சென்னைக்கு செல்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.