உடுமலை : மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உள்ளடக்கிய கல்வி வழங்க, பள்ளிக்கல்வித்துறை ஊக்குவிக்கும் நிலையில், உள்ளடக்கிய கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் உள்ளனர்.
அரசு பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் உள்ள, பன்முகத் திறமையை வெளிக்கொணர, பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலை விழா நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளை, சமுதாயத்தில் இருந்து மாறுபடுத்தி காண்பிக்காமல், அவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்க, பள்ளிக்கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது.
அதன்படி, மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளையும், சாதாரண நிலையில் கல்வி பயிலும் பிள்ளைகளுடன் இணைத்து கல்வி கற்பிக்க செய்வதே, உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் நோக்கமாகும்.
சாதாரண குழந்தைகளுடன், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் தன்மைக்கேற்ப அவர்களை பழக்கப்படுத்துவது, அமர வைப்பது, சிறப்பாசிரியர்கள் வாயிலாக, கல்வி கற்பிக்கச்செய்வது உள்ளிட்ட பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
ஏற்கனவே, ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில், வட்டார அளவில் மாற்றத்திறன் படைத்த குழந்தைகளுக்கென, சிறப்பாசிரியர்கள் வாயிலாக, பிரத்யேக பயிற்சி, கல்வி வழங்கப்படுகிறது. சைகை மொழி பேச்சு, 'பிரெய்லி' எழுத்துக்கள் வாயிலாக, கல்வி கற்பிக்கப்படுகிறது.
சிறப்பு கல்வி வழங்குவது, இயன்முறை மருத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பு பயிற்றுனர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, அரசு மெத்தனம் காட்டி வருவதாக, அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு, தற்காலிக பணி ஆணை, அடிப்படை பணிச்சலுகை கூட வழங்கப்படுவதிலலை.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், உள்ளடக்கிய சிறப்பு பயிற்றுனர்களுக்கு, 4 ஆண்டில் ஒரு முறை கூட ஊதியம் உயர்த்தப்படவில்லை.
உள்ளடக்கிய கல்வி தகுதி பெற்ற சிறப்பு பயிற்றுனர்களை மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை முன்வைத்து மாவட்ட கலெக்டர்களிடம் மனு வழங்குவது, முற்றுகை போராட்டம் நடத்துவது என, அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன்மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
ஆக, உள்ளடக்கிய கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, அரசின் மீது அதிருப்தியில் இருப்பதால், அரசின் நோக்கம் முழு வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.