காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகளில், கையேந்தி பவன்கள், தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகள், காய்கறி, பழம் வியாபாரம் செய்யும் மாட்டு வண்டிகள், மினி வேன்களுக்கு தடை விதித்து, தனி இடம் ஒதுக்க வேண்டும் என, தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை பார்க்கவும், பட்டு சேலை எடுக்கவும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் திரளானோர், காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்வதாலும், காஞ்சிபுரத்தில் மக்கள் தொகை பெருக்கமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, சாலைகள் அகலப்படுத்தப்படாமல் உள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களைப் போல, இங்கு சாலையின் நடுவில் மின் விளக்குடன் தடுப்புச்சுவரோ, ரவுண்டானாவோ, சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதியோ இல்லை.
இந்நிலையில், புற்றீசல் போல பிரதான சாலைகளில், கையேந்தி பவன்கள், தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகள், காய்கறி, பழம் வியாபாரம் செய்யும் மாட்டு வண்டிகள், மினி வேன்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நிரந்தர கடை வைத்திருப்போரும், நடைபாதையை ஆக்கிரமித்து, தங்களது கடையை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளதால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பிரதான சாலைகளில், தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகள், மாட்டு வண்டி, மினி வேன் கடைகளுக்கு தடை விதித்து, தனியாக இடம் ஒதுக்கி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.