உத்திரமேரூர்:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களுக்கு ஆடு, மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டமானது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், நடப்பாண்டிற்கு ஆட்டு கொட்டகை அமைக்க, 58 பயனாளிகள், மாட்டு கொட்டகை அமைக்க, 58 பயனாளிகள் என, 116 பேர் தேர்வு செய்யப்பட்டு, கொட்டகை அமைப்பதற்கான பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.
மேலும், தனி நபர் விவசாய கிணறு அமைக்க, 9 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது.
உத்திரமேரரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா தலைமையில், இந்நிகழ்ச்சி நடந்தது.
மொத்தம் 125 பயனாளிகளுக்கு, 2 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கான பணி ஆணையை, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் வழங்கினார்.
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜ், லோகநாதன் மற்றும் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் உள்ளிட்டோர், இதில் பங்கேற்று பேசினர்.