காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான சங்கங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், சங்க கட்டடம் கட்டுவதற்கு பல இடங்களில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் நகரின் முக்கியமான இடங்களிலேயே நிலம் வழங்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், சங்க கட்டடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட இந்த இடங்கள், இன்று வரை எந்தவித கட்டடமும் கட்டப்படாமல், அப்படியே உள்ளது.
கட்டடம் கட்டாமல் இருக்கும் இந்த இடங்களை, சமூக விரோதிகள் பயன்படுத்துவதும், இரவில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தும் வகையிலேயே காணப்படுகிறது.
ஆனால், சங்கத்திற்கு தேவையான கட்டடம் கட்டுவதாக தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்த நிலங்களை, மாவட்ட நிர்வாகம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:
பொதுவாக சங்கங்களுக்கு வழங்கப்படும் நிலங்களில் உடனடியாக கட்டுமான வேலைகளை துவங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் பல இடங்களில், சங்கங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை, பல ஆண்டுகளாக அப்படியே வைத்துள்ளனர்.
அந்த இடத்தில் எந்தவித கட்டுமான வேலைகளும் நடைபெறாமல் யாருக்கும் பயனற்று கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் வழங்கப்பட்ட நோக்கமே இதன் வாயிலாக பாழாகிறது.
மாவட்டத்தில், 20க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. அதுபோன்ற அரசு துறைகளுக்கு, இந்த இடங்களை வழங்கலாம். துறை அதிகாரிகள் நிதி பெற்று அரசு கட்டடங்களையாவது அந்த இடத்தில் கட்டுவார்கள். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.