காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், நாகலத்துமேடு சுடுகாட்டில் 2 கோடி ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்ட இருக்கிறது. இதனால் அங்கு கல்லறை கட்ட அனுமதி கிடையாது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சின்ன காஞ்சிபுரம், நாகலத்துமேடு சுடுகாட்டில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தால் அங்கு புதைப்பது வழக்கம். அதில் சிலர் முன்னோர் நினைவாக கல்லறை கட்டியுள்ளனர்.
அந்த சுடுகாடு இட நெருக்கடியாக இருக்கிறது. இறந்தவர் உடலை எரியூட்டுவதற்காக 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட இருக்கிறது. இதனால் அந்த சுடுகாட்டில் கல்லறை கட்ட அனுமதி கிடையாது என, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏற்கனவே வெள்ளக்குளம், தாயார்குளம் ஆகிய இரு இடங்களில் எரிவாயு தகன மேடை இயங்கி வருகிறது.
அதே போல் நாகலத்துமேடு பகுதியிலும் 'நமக்கு நாமே' திட்டத்தில் நவீன தகன மேடை கட்டுவதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மாநகராட்சி பொறியாளர் கணேசன் கூறியதாவது:
நாகலத்துமேடு சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுவதற்கு அரசு 1.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மீதி தொகை பங்களிப்பில் பெறப்பட்டது.
கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து பின், டெண்டர் விடப்படும்.
தற்போது அந்த சுடுகாட்டில் இட நெருக்கடியாக இருக்கிறது. புதிய எரிவாயு தகன மேடை கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்லறைகள் இடிக்கப்பட இருக்கிறது.
கல்லறை கட்டுவதற்கு அனுமதி எப்பவும் கிடையாது. இதுவரை கட்டியவை அனைத்தும் அனுமதியின்றி கட்டப்பட்டவையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.