உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும், டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களை தடுக்கவும் புகை மருந்து தெளிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் வாயிலாக, டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முனனெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக பேரூராட்சியின் பல இடங்களில், கொசு மருந்துக்கான புகை தெளிப்பு பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியநாசம்பேட்டை தெரு, வேடபாளையம், பேருந்து நிலையம், பஜார் வீதி மற்றும் அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை தெளிக்கப்பட்டது.
மேலும், பேரூராட்சி பகுதிகளில், கால்வாய் அடைப்பு நீக்குதல், பிளாஸ்டிக் கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.