திருச்சி:வரும் 19ம் தேதி, கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் போரட்டம் நடத்தப்படும் என, பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.
பாரதிய கிசான் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் பெருமாள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ., அரசு விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்குவோம், என கூறியது. ஆனால், ஆதார விலையை மட்டும் ஏற்கின்றனர். அது, விவசாயிகளுக்கு லாபகரமானதாக இல்லை. விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும்.
வேளாண் இயந்திரங்கள், உரங்கள் மற்றும் வேளாண் தொடர்புடைய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி., 18 சதவீதம் உள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது.
எனவே, விவசாயத்திற்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்; பிரதமரின் கிசான் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்; மரபணு மாற்றப்பட்ட விதைகளை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.
தற்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை சாகுபடி செய்ய, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தை தனிப்பட்ட விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் வரும் 19ல் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் 5 லட்சம் விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை உயர்வுக்கு, அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமல்ல; சர்வதேச சந்தை மதிப்பு தான் காரணம். பாரதிய கிசான் சங்கம் பா.ஜ., அரசின் சங்கமல்ல; இது ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் விவசாய பிரிவு. எந்த ஆட்சி இருந்தாலும், விவசாயிகளுக்காக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.