ப.வேலுார்:திருமணம் ஆன, மூன்றே நாளில், தாலியை கழற்றி வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் செல்ல முயன்ற புதுப்பெண்ணின் செயலால், கணவர் நடுரோட்டில் கதறி அழுதார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வெங்கரைச் சேர்ந்த பெண்ணுக்கும், குளித்தலைச் சேர்ந்த வாலிபருக்கும், கடந்த 4ம் தேதி திருமணம் நடந்தது.
ஆயிரம் கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கிய வாலிபர், நேற்று காலை காரில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல மனைவியை அழைத்து வந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் அவர்கள் வந்த போது, பைக்கில் வந்தவர் காரை மறித்து நிறுத்தினார்.
காரில் இருந்த புதுப்பெண் இறங்கி, தன் தாலியை கழற்றி, கணவர் மீது வீசி விட்டு, பைக்கில் வந்தவருடன் செல்ல முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவர் கூச்சலிட, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, புதுப்பெண்ணையும், பைக்கில் வந்தவரையும் பிடித்துக் கொண்டனர்.
பின் விசாரித்த போது, பைக்கில் வந்தவர், புதுப்பெண்ணின் காதலர் என்றும், திருமணம் பிடிக்காமல், மீண்டும் காதலருடன் செல்ல புதுப்பெண் திட்டமிட்டதும் தெரிந்தது. இதையடுத்து, பைக்கில் வந்தவரை, பொதுமக்கள் பிடித்து, ப.வேலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
புதுப் பெண்ணின் தந்தையை வரவழைத்த கணவர், அவரிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு, தனக்கு நேர்ந்ததை எண்ணி கதறி அழுதார்.
இது, அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
போலீசில் ஒப்படைக்கப்பட்டவர், ப.வேலுார் அருகே சேலுார் செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்த குமார், 39, என்பதும், கரூர் தனியார் கல்லுாரில் பஸ் டிரைவராக இருந்தபோது, அந்த பெண்ணை காதலித்ததும் தெரிந்தது.