கோவை : உக்கடத்தில் தெருநாய் கருத்தடை மையம் அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மேயர் கல்பனாவை முற்றுகையிட்டனர்.
உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில் இருந்த தெருநாய் கருத்தடை மையம், சுற்றுப்பகுதி மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டு, வார்டு அலுவலகமாக மாற்றப்பட்டது.
தற்போது வார்டு அலுவலகம் வேறிடத்துக்கு மாற்றி விட்டு, கருத்தடை மையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
இம்மையத்தை திறந்து வைக்க, மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை புல்லுக்காடு பகுதி மக்கள் முற்றுகையிட்டு, 'கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆடு, மாடு அறுவைமனை உள்ளிட்டவை இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாய் கருத்தடை மையம் செயல்பட்டால், இப்பகுதியில் வசிக்கவே முடியாது. புதிதாக வேறிடத்தில் கட்ட வேண்டும்' என கூறினர்.
அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்தனர். 'கருத்தடை செய்யப்படும் நாய்கள், பிடித்த இடத்திலேயே மீண்டும் விடப்படும்' என உறுதியளித்தனர்.
கோவை மாநகராட்சி சார்பில், ஏற்கனவே ஒண்டிப்புதுார், சீரநாயக்கன்பாளையத்தில் இம்மையங்கள் பராமரிக்கப்படுகின்றன.
பிராணி மித்ரன், எச்.ஏ.எஸ்., தொண்டு நிறுவனத்தினர் மூலம், ஒன்பது மாதங்களில், 2,300 நாய்களுக்கு கருத்தடை செய்திருக்கின்றனர். 445 ரூபாய் வீதம் வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, செப்., முதல், 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன் பின், ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல, புதுப்பிக்கப்பட்ட வாகனத்தின் இயக்கத்தையும், மேயர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர் அப்துல் ஹபீர், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர், கால்நடை டாக்டர் செந்தில்நாதன், உதவி நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறுகையில், ''கோவை நகர் பகுதியில் உத்தேசமாக, ஒரு லட்சம் தெருநாய்கள் இருப்பதாக அறிகிறோம். தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் கணக்கெடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகமான நாய்களை பிடித்து கருத்தடை செய்யலாம் என ஆலோசித்தோம்; அவற்றை பராமரிப்பதில் சிக்கல் இருக்கிறது.நாளொன்றுக்கு, 100 நாய்களுக்கு கருத்தடை செய்ய அறிவுறுத்தி வருகிறோம். மண்டலத்துக்கு ஒன்று வீதம் கருத்தடை மையம் கட்டப்படும். சீரநாயக்கன்பாளையம் மையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்,'' என்றார்.