கோவை : லயன்ஸ் கிளப் ஆப் சவேரியார்பாளையம் சார்பில், காந்திமாநகர் அரசுப்பள்ளியில், கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இதோடு, மாணவர்கள் பயிற்சி பெற, இசைக்கருவிகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு தேவையான நாற்காலி உள்ளிட்ட, கற்பித்தல் உபகரணங்களும் அளிக்கப்பட்டன.
விழாவில், முன்னாள் நீதிபதி முகமது ஜியாபுதீன் பேசுகையில், ''அரசுப்பள்ளிகளில் படிப்பதால், உங்களின் மதிப்பை, நீங்களே குறைத்து எடை போடக்கூடாது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசுப்பள்ளி மாணவர் தான். அவர் பள்ளியில் படிக்கும் போது, கிழிந்த கால்சட்டையை மறைக்க, நீளமான மேல்சட்டை அணிவாராம். சட்ட மேதை அம்பேத்கருக்கு, கல்வி புறக்கணிக்கப்பட்டது. தடைகளை மீறி படித்ததால்தான், அரசியல் அமைப்பு சாசனத்தையே, உருவாக்கும் வல்லமை பெற்றார். எனவே, கல்வி ஒன்றுதான், உங்களின் உயரத்தை தீர்மானிக்கும் அளவுகோல் என்பதை, மனதில் வைத்து, படிக்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், லயன்ஸ் கிளப் ஆப் சவேரியார்பாளையம் தலைவர் கர்ணன், தலைமையாசிரியை விஜயலட்சுமி உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.