புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் அரசு விழாவில் ஏற்பட்ட குளறுபடியால், அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் 'டென்ஷன்' ஆகினர்.
கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்க வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை வரவேற்று, பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவியர் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலர் தங்கமணி தலைமையில் விழாக் குழுவினர் செய்தனர். வரவேற்புக்காக பாடல் ஒலிக்க தொடங்கிய போது, அவ்வப்போது பாடல், நிறுத்தப்பட்டதால், மாணவியர் நடனமாடுவதில் சிரமத்திற்குள்ளாகினர்.
அதனால், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கடும் அதிருப்தியடைந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை 'டோஸ்' விட்டார். அமைச்சர் ரகுபதியும் வரவேற்பு நடனம் குளறுபடியால் ரசிக்கவில்லை.
அருகில், நின்று கொண்டிருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் என்ன செய்வதென தெரியாமல் நெளிந்தார். இருப்பினும் நிலைமை சரிசெய்து, விழாவை முடித்தனர்.
இதை போல, புதுக்கோட்டை, போஸ்நகர் குடிசை மாற்று வாரிய வீடுகள், சென்னையில் இருந்து 'வீடியோ கான்பரசிங்'கில் திறப்பு விழா நடந்தது. அதிலும் பயனாளியர் பட்டியல், பெயர் வாசிப்பதில் குளறுபடி ஏற்பட்டதால், அமைச்சர் ரகுபதி பட்டியலை தேட, அவருக்கு புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., முத்துராஜா உதவினார்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏற்பட்ட குளறுபடியால் அமைச்சரும், கலெக்டரும் அதிகாரிகளுக்கு டோஸ் விட்டனர்.