மதுரை : துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனிநபர் தானமாக அளித்த நிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க தடை விதித்து, நகரின் மைய பகுதிக்கு மாற்ற தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உடன்குடி குண சீலன் தாக்கல் செய்த பொதுநல மனு:
உடன்குடியில் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் உள்ளது.
ஒருவர் உடன் குடி அனல்மின் நிலையம் அருகே அரசு அனுமதி பெற்று வீட்டுமனை விற்பனையை துவக்கினார். அது சரியாக நடை பெறவில்லை. அருகில் அவரது மனைவி பெயரில் நிலம் உள்ளது.
அதில் சார்பதிவாளர் அலுவலக நிரந்தர கட்டடம் அமைக்க குறிப்பிட்ட அளவு நிலத்தை தானமாக அளித்தார். அந்த இடம் உடன்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ., துாரம் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் காலி இடம் உள்ளது.
இதில் கட்டடம் அமைக்கலாம். தனிநபர் ஆதாயத்திற்காக தானமாக பெற்ற இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்துள்ளனர்.
அதற்கு தடை விதிக்க வேண்டும். மக்களிடம் கருத்து கேட்டு நகரின் மையப் பகுதிக்கு மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு பதிவுத்துறை தலைவர், துாத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரம் ஒத்திவைத்தது.