விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 4 மையங்களில் நேற்று துவங்கியது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கலைத்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா போட்டிகளை பள்ளிக் கல்வித் துறையினர் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ.23ம் தேதி துவங்கி, பள்ளியளவில், வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று துவங்கியது.
இப்போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடனப் போட்டிகளும், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இசை (வாய்ப்பாட்டு), இசைகருவிகள், மொழித்திறன், தோல்கருவி, துளைக்காற்றுக் கருவி, தந்திக் கருவிகள், இசைச் சங்கமம் ஆகிய போட்டிகள் நடக்கிறது.
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கவின்கலை, நுண்கலைப் போட்டிகளும், விழுப்புரம் மருத்துவமனை வீதி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நாடகப் போட்டிகளும் நடைபெறுகிறது. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகள் நேற்று 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நடந்தது. இன்று 9,10ம் வகுப்புகளுக்கும், நாளை ( 9ம் தேதி) பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
விழுப்புரத்தில் நடந்த இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் சத்தியநாராயணன், பெருமாள், கிருஷ்ணன், மணிமொழி, கெளசர், தனவேல், தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.