திருப்பூர் : 'ரெப்போ ரேட்' உயர்ந்துள்ளதால் 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி சலுகையை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர்(பியோ) சக்திவேல் கூறுகையில்,''ரெப்போ ரேட்' விகிதம் உயர்வதால், ஏற்றுமதி நிறுவனங்களின் போட்டித்திறன் குறையும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி சலுகையை, மூன்றில் இருந்து ஐந்து சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 'ரெப்போ ரேட்' மற்றும் டாலர் மதிப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும், பாதிப்பை தவிர்க்க ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''மத்திய ரிசர்வ் வங்கி 'ரெப்போ ரேட்' உயர்வால், வட்டி விகிதம், 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது; போட்டி நாடுகளை சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்கள் எழுந்துள்ளன. இவற்றை சமாளிக்க, 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி சலுகையை, அனைவருக்கும், 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய ரிசர்வ் வங்கி ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை நீட்டிப்பு செய்து 'ரெப்ரோ ரேட்' உயர்வால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்; வெளிநாட்டு பணமதிப்பிலேயே கடன்பெற ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.