ஈரோடு, டிச. 8-
ஈரோட்டில் ஷோரூம் ஷட்டரை உடைத்து, 13.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 35 மொபைல் போன்களை திருடி சென்றவரை, 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், மேட்டூர் சாலையில், 'ஹேப்பி மொபைல் ேஷாரூம்' உள்ளது. இங்கு, மொபைல் போன் விற்பனை, சர்வீஸ் மற்றும் மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை
செய்யப்படுகிறது. ஈரோட்டை சேர்ந்த பூபதி, கோவையை சேர்ந்த தரணிதரன் ஆகியோர், உரிமையாளர்களாக உள்ளனர். நேற்று காலை, 7:00 மணியளவில் பூட்டப்பட்ட கடை முன் கண்ணாடி உடைந்து நொறுங்கி கிடப்பதை கண்ட துாய்மைப்பணி செய்யும் பெண், கடை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள், கடைக்கு வந்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று காலை, 5:10 மணிக்கு, ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து மர்மநபர், 13 லட்சத்து, 21 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பிலான, 35 ஐபோன், ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த, 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றார்.
தகவலறிந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், புகாரளித்த, 2 மணி நேரத்தில், கை
வரிசை காட்டிய மர்ம நபரை, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் மதியம், 1:00 மணிக்கு கைது செய்தனர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், தோப்பூர், சாந்த
புரத்தை சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார், 47, என்பதும், குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வரும் இவர், ேஷாரூமில் செல்போன்களை திருடியதும் தெரியவந்தது.