ஈரோடு, டிச. 8-
வங்காள விரிகுடாவில், 'மாண்டஸ்' புயல் உருவாகி உள்ளதால், வரும், 10ல் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இம்மாவட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், ஆறு, நீர் நிலைகளில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர் நிலைகளின் இரு கரைகளிலும் வசிப்போர், பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். மின் கம்பம், மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் கால்நடைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மின்னல், இடி ஏற்படும்போது மரத்தின் அருகே செல்லவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ கூடாது.
மழையின்போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல், இடியின்போது மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால், மின்வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும், என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டார்.