ஈரோடு, டிச. 8-
ஈரோடு மாவட்டத்தில், துாய்மை பாரத இயக்கத்தில், 3.39 கோடி ரூபாய் மதிப்பில், 1,306 தனி நபர் இல்ல கழிப்பறை, 10 சமுதாய சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை பாரத இயக்க திட்டத்தில், தனிநபர் இல்ல கழிப்பறைகள், சமுதாய சுகாதார வளாகங்கள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனிலும் தலா, 2 பஞ்.,கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 28 பஞ்.,களில், 142 திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை பணிகள், 1.93 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, 132 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தவிர, 984 தனி நபர் இல்ல கழிப்பறைகள், 13 சமுதாய சுகாதார வளாகங்கள், 3 திடக்கழிவு மேலாண்மை அலகுகள், 12.59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில், 1,306 தனிநபர் இல்ல கழிப்பறைகள், 10 சமுதாய சுகாதார வளாகங்கள், 4 குறுகிய
சமுதாய சுகாதார வளாகங்கள், 3.39 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.