ஈரோடு, டிச. 8-
தண்டனை தொகையை செலுத்துவதாக கூறிய பின்னரும், கார், டூவீலர்களை எஸ்.ஐ., விடுவிக்க மறுப்பதாக கூறி வாலிபர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பி உள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பள்ள
பாளையம் கரட்டுபாளையத்தை சேர்ந்த சண்முகாநந்த், 29, டி.ஜி.பி., மற்றும் ஈரோடு எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ள மனு:
நானும், என் நண்பர்கள் கார்த்திக்குமார், சம்பத், ஜோதி, பரணி ஆகியோருடன் கடந்த, 29 மாலை, 3:00 மணிக்கு அந்தியூர், கொண்டயம்பாளையம் பகுதியில் சேவல் சண்டைக்கு காரில் சென்றோம். சண்டை முடிந்து வரும் வழியில், மாலை, 5:00 மணிக்கு
அந்தியூர் எஸ்.ஐ., கார்த்தி, எங்கள் காரை வழிமறித்தார். எங்களுடன் மேலும் டூவீலரில் வந்த மூவரையும் பிடித்தார். பின், கார், டூவீலர்களை அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்.
உரிய தண்டனை தொகையை செலுத்த தயாராக உள்ளோம் என கூறினோம். ஆனால், அவர் ஒவ்வொருவரும், 10 ஆயிரம் ரூபாய் எனக்கு தரவேண்டும் என, கேட்டார். நாங்களும் மொபைல் பரிவர்த்தனை மூலம், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம். மேலும், 2 டூவீலர்களையும், வாங்கி வைத்துக்கொண்டார். எங்கள் காரையும் இதுவரை திருப்பி தரவில்லை. அவருக்கு, மொபைல்
பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பியதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது. தண்டனை தொகையை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்த பின்னரும், எங்கள் வாகனங்களை கொடுக்காமல் வைத்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, எஸ்.ஐ., கார்த்தி கூறியதாவது:
'வழக்குப்பதிவு செய்யக்கூடாது; காரை விட்டு விட வேண்டும்' என, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் என்னிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட விபரத்தையும், நடந்த சம்பவங்களையும் தெரிவித்தேன். என்னிடம் பேசிய, தி.மு.க., பிரமுகர்கள், 'இப்பிரச்னையை சட்ட ரீதியாக தீர்த்து கொள்ளட்டும்' என கூறிவிட்டனர்.
இதுகுறித்து, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். நேரடியாக என்னிடம் காரை விடுவிக்க அணுகினர். அது முடியாததால், தற்போது வெவ்வேறு வழிகளில் என்னை பற்றி அவதுாறு பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.