கோபி, டிச. 8-
மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, நான்காண்டுகளுக்கு பின், டிச., 14ல், பூச்சாட்டுதலுடன் கோலாகலமாக துவங்குகிறது.
கோபி அருகே, மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன்
சன்னதி எதிரே, 60 அடி நீளத்தில் திருக்குண்டம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபி ேஷகத்துக்காக, திருப்பணிகள் துவக்கமாக, கடந்த, 2018 ஜூலையில், பாலாலயம்
நடந்தது.
அதன்பின் கடந்த, 2019ல், லோக்சபா தேர்தல் நடத்தை விதி, கொரோனா தொற்று முழு ஊரடங்கு, துறை ரீதியாக அனுமதி கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட காரணங்களால், திருப்பணி துவங்குவதில் சிக்கல் நீடித்தது.
இதனால், அதுமுதல் இக்கோவிலில், கடந்த நான்காண்டுகளாக, குண்டம் தேர்த்திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், திருப்பணிகள் அனைத்தும் முடிந்து, 23 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது கும்பாபி ேஷக விழா, கடந்த, 11ல் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து, நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா வரும், 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 26ல் சந்தனக்காப்பு அலங்காரம், 28ல், மாவிளக்கு பூஜை, 29 காலை, 7:40 மணிக்கு, பக்தர்கள் பூ மிதிக்கும், குண்டம் திருவிழா நடக்கிறது. 30ல் திருத்தேர் வலம் வருதல், 2023 ஜன., 1ல் தெப்பத்தேர் உற்சவம், 2ல், மறுபூஜை, 6ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.