ஈரோடு: ஈரோட்டில், 23.6 கோடி ரூபாய் மதிப்பிலான, ஸ்மார்ட் சிட்டி மாடல் ரோடு திட்டப்
பணிகள் துவங்கி உள்ளன.
ஈரோட்டில், 23.6 கோடி ரூபாய் மதிப்பிலான, ஸ்மார்ட் சிட்டி மாடல் ரோடு திட்டப்பணி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறமிருந்த, 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வெட்டி விறகாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பழமைவாய்ந்த பிற மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனை-நால்ரோடு-சென்னிமலை சாலை துவக்க பகுதி-காளை மாட்டு சிலை, எஸ்.பி., அலுவலகம் வரை, 2.7 கி.மீ., துாரம், ஸ்மார்ட் சிட்டி திட்ட மாடல் ரோடு போடப்படுகிறது. இவை, மாநில நெடுஞ்சாலைத்துறை
கட்டுப்பாட்டில் வருகிறது.
இனிவரும் நாட்களில், எந்த காரணத்துக்காகவும் தார்ச்சாலையை தோண்டாமல் இருக்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும், 6 குழாய்களும், சாலையின் நடுவே ஒரு குழாயும் பதிக்கப்படும். இனி இந்த குழாய்கள் வழியே தான் அனைத்து கேபிள்களும் கொண்டு செல்ல வேண்டும். மாடல் ரோட்டில் இருபுறமும் மழைநீர் வடிகால், நடைபாதை, தார்ச்சாலை அல்லது பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படும். மாடல் ரோடு பணி துவங்கி
உள்ளது.
முதற்கட்டமாக மரங்களை வெட்டி அகற்றப்படுகிறது. ஓரிரு நாட்களில் சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணி துவங்கி நடைபெறும். சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் விரைவில் அகற்றப்படும். பெருகி வரும் வாகனங்களுக்கேற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
அப்போது வேறு வழியின்றி மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது. இப்பணி, 6 மாதத்தில் முடிக்கப்படும். 5 ஒப்பந்ததாரர்களிடம் இப்பணி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.