ஈரோடு, டிச. 8-
ஈரோடு மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, நேற்று துவங்கியது. வரும், 10 வரை நடக்கிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்
நிலைப்பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள், அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆடல், பாடல், மொழித்திறன், மனப்பாடம், இசை வாசித்தல், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள்
அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வான மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.
வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று துவங்கியன. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அந்தியூர் ஐடியல் பள்ளியிலும், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லுாரியிலும் நடக்கிறது. போட்டிகளை நடத்த ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர், கோபி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.