கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
தாராபுரம்: தாராபுரத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாராபுரம், பழைய நகராட்சி அலுவலகம் முன், நேற்று காலை, 11:00 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், 4 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள, அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை வழங்க கோரி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொன்னுசாமி, மேகவர்ணன், கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
காருடன் ஒருவர் கைது
காங்கேயம்: திருப்பூர் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார், காங்கேயம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, லட்சுமி நகர்-2வது வீதியில் வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. அதில், 1,115 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த வெங்கடேஷ், 47, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் காங்கேயம், திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. வெங்கடேஷை கைது செய்து, 1,115 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
ஊராட்சி உறுப்பினர்களிடம்
சமரச பேச்சு தோல்வி
தாராபுரம்: தாராபுரம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவி மற்றும் உறுப்பினர்களிடம், நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தாராபுரம், கவுண்டச்சிபுதுார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நேற்று முன்தினம், உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது, ஊராட்சி மன்ற தலைவி செல்வி வெளிநடப்பு செய்து தர்ணா செய்தார். இதையடுத்து, நேற்று, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் முன்னிலையில், சமரச பேச்சுவார்த்தை நடந்தபோது, மீண்டும் ஊராட்சி மன்ற தலைவி செல்வி வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்களது கோரிக்கைகளை, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமாரிடம் அளித்தனர்.
சாலை ஆக்கிரமிப்பால்
பாஸ்கரன் வீதியில் அவதி
கோபி: கோபி பாஸ்கரன் வீதியில், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோபி, கச்சேரிமேடு அருகே பாஸ்கரன் வீதியில், ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், தங்கள் டூவீலர் மற்றும் கார்களை சாலையை ஆக்கிரமித்து, தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், பிற வாகனங்கள் சீராக பயணிக்க வழியின்றி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் தணிக்கை செய்து, சாலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.43 லட்சத்துக்கு
தே.பருப்பு விற்பனை
காங்கேயம்: வெள்ளகோவில், வாணியம்பாடி, அப்பியம்பட்டி, கரூர், புளியம்பட்டி, தென்னங்கரப்பாளையம், வாங்கலாம்பாளையம் பகுதி விவசாயிகள், 112 பேர், 1,068 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் முத்துார், வெள்ளகோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், 15 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு, அதிகபட்சமாக கிலோ, 91 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 65.15 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 43 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.
காமெடி நடிகர் மரணம்
சென்னை, டிச. 8-
திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை சிவநாராயண மூர்த்தி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
திரைப்பட நடிகரான பட்டுக்கோட்டை சிவநாராயண மூர்த்தி, 66, என்பவர், 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி புஷ்பவல்லி. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு உடல் நலக்குறைவால் சிவநாராயண மூர்த்தி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் நடக்கிறது.
2022ன் ஆளுமைமிக்க மனிதராக
உக்ரைன் அதிபர் பெயர் அறிவிப்பு
நியூயார்க், டிச. 8-
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை, இந்த ஆண்டின் ஆளுமைமிக்க மனிதராக, 'டைம்ஸ்' பத்திரிகை அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய படையினரை துணிச்சலுடன் எதிர்த்து போராடி வருகிறார். உக்ரைன் மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் இவரை கதாநாயகனாக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கியை இந்த ஆண்டின் ஆளுமைமிக்க மனிதராக, 'டைம்ஸ்' பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.
அர்ஜுன் சம்பத் மீது
தமிழக அரசு வழக்கு
கோவை, டிச. 8-
சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பரப்பியதாக கூறி, ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.அதற்கு பதில் அளித்த சென்னையை சேர்ந்த ரஹீம் என்பவரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவர் மீதும், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கொடி நாள் நிதி வசூல் துவக்கம்
ஈரோடு, டிச. 8-
ஈரோடு மாவட்டத்துக்கு, கடந்தாண்டு படைவீரர் கொடி நாள் நிதி வசூல் இலக்காக, ஒரு கோடியே, 36 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோடியே, 49 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டுக்கு, ஒரு கோடியே, 44 லட்சத்து, 47 ஆயிரம் ரூபாய் ஈரோடு மாநகராட்சிக்கு, 4 லட்சத்து, 39 ஆயிரம் ரூபாய் என வசூல் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து துறையினரும், தாராளமாக நிதி வழங்க வேண்டும், என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
கடந்த, 2019ல், 3 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நிதி வசூலித்தவர்களுக்கு, 30 கிராம் வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழும், 2021ல், 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடி நாள் வசூலித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன.
பின், முன்னாள் படை
வீரர்கள், அவர்கள் சார்ந்தோர் என, 32 பேருக்கு, 6.58 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.