குளித்தலை, டிச. 8-
குளித்தலையை அடுத்த, திம்மம்பட்டி பஞ்.,ல் 9 வார்டுகள் உள்ளன. இங்கு பஞ்., தலைவராக செல்வி உள்ளார்.
இவருக்கு பதிலாக இவரது கணவர் முருகன் தான், பஞ்., நிர்வாகத்தை நடத்துவதாகவும், இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, துணைத் தலைவர் ராஜகோபால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, கிருத்திகா, தீபா, அன்னக்கிளி, பெரியக்காள், வடிவேல், பொன்னுசாமி ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் குளித்தலை யூனியன் அதிகாரிகளிடம் நேற்-று முன்தினம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
திம்மம்பட்டி பஞ்., நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளது. அலுவலகத்தில் அவரே அதிகமாக செயல்படுகிறார். இங்கு உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, போன்றவற்றை செய்து தருவதே
இல்லை.
பொது நிதி வருவதையும் அதன் மூலம் செய்யப்படும் வேலைகளையும் வார்டு உறுப்பினர்களிடம் தெரிவிப்பதில்லை. பஞ்.,
அலுவலகத்துக்கு தலைவர் வருவதே கிடையாது. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை தலைவரிடம் தெரிவித்தும் இதுவரை செய்து தரவில்லை. இதனால் வார்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளோம். 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே பஞ்., கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே பஞ்., நிர்வாகம் சரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து யூனியன் கமிஷனர் நீலகண்டன் கூறுகையில், 'பஞ்., வார்டு உறுப்பினர்கள் அளித்த மனு மீது நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'
என்றார்.
இந்த விவகாரம் குறித்து பஞ்., தலைவர் செல்வி கூறியதாவது:
என் மீதும், என் கணவர் மீதும் பொய்யான தகவல் கொடுத்துள்ளனர். வளர்ச்சி பணிகள் குறித்து நான் சொல்வதை பஞ்., செயலாளர் சக்திதாசன் செய்வதில்லை. இது குறித்து முன்னாள் யூனியன் கமிஷனர் ராஜேந்திரனிடம் பலமுறை மனு கொடுத்தேன். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை
எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.