கரூர், டிச. 8-
காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, கரூர் அருகே சணப்பிரட்டி தொழிற்பேட்டையில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
கரூர் - திருச்சி பழைய சாலையில் தொழிற்பேட்டை பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதன்மூலம், தொழிற்பேட்டை பகுதியில் உள்ள வீடுகள், பொது குழாய்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்தது. துாணில் இருந்த சிமென்ட் பூச்சுகள், உதிர்ந்த நிலையில், கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தொழிற்பேட்டையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின், துாண்களை சீரமைக்கும் பணிகள், தற்போது தொடங்கியுள்ளது.