மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் 13.5 ஏக்கரில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த 'பஸ் ஸ்டாண்ட்' அமைப்பதற்காக தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறைக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் 7 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது.
நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021- - 2022ன் கீழ் தமிழக அரசு 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு சமீபத்தில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் அவசர கூட்டம் நடத்தி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
எம்.எல்.ஏ.,க்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம்முருகன், நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஒருங்கிணைந்த புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜையை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
விழாவில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பணி தொடங்கியது பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்தாலும் உரிய சாலை வசதி இல்லாததால் இத்திட்டம் பொதுமக்களுக்கு பயனற்றதாகவே இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.