சேத்தியாத்தோப்பு: தி.மு.க., அரசை கண்டித்து, கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., அரசின் அவலநிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி, கடலுார் மேற்கு மாவட்டத்தில் இன்று (9ம் தேதி) காலை 10:00 மணியளவில், புவனகிரி பேரூராட்சி எம்.ஜி.ஆர்., சிலை, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ராஜிவ்காந்தி சிலை பஸ் நிறுத்தம், கங்கைகொண்டான் பேரூராட்சி நான்குமுனை ரோடு, மங்கலம்பேட்டை பேரூராட்சி சிவன் கோவில் அருகில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுபோல, வரும் 13, 14ம் தேதிகளிலும் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளார்.