கோவை;கோவை காந்தி மாநகரில் இளம்பெண், விஷத்தால் மரணம் அடைந்தது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் இம்மானுவேல்; கார் டிரைவர். கிருஷ்ணகிரியை சேர்ந்த இவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பவித்ரா, 24, என்பவரும், 2018ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவதும், பெற்றோர் தலையிட்டு சமாதானம் செய்வதுமாக இருந்தனர்.
இந்நிலையில் டிச.,5ம் தேதி பகல் 3:00 மணிக்கு, வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பிய இம்மானுவேல், மனைவி வாந்தி எடுப்பதை கண்டு விசாரித்தார்.
விஷம் குடித்து விட்டதாக கூறியதால், மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ரா, பலனின்றி இறந்தார்.
சம்பவம் தொடர்பாக, பவித்ராவின் தந்தை பழனி, 47, போலீசில் புகார் அளித்தார். அதன்படி, உதவி கமிஷனர் பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி ஏழாண்டுக்குள் பெண் மரணம் நிகழ்ந்துள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.