திருப்பூர்:மண்ணரை மூளிக்குளம் 60 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இருப்பினும், இந்தப்பணி மூலம், குளம் முழுக்க நிறைந்துகிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படாது. இவற்றையும் அகற்ற வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியில் ஏறத்தாழ 30 ஏக்கர் பரப்பளவில் மூளிக்குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் அணைக்காடு பகுதியில் உள்ள அணைக்கட்டிலிருந்து 2 கி.மீ., துாரம் பயணித்து வாய்க்கால் மூலம், இக்குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. குளம் நிரம்பிய பின் இதன் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடைமடை வழியாக மீண்டும் நொய்யலுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குளத்தின் கரைகள் மேம்படுத்தி, கற்கள் பதித்து சாய்வுதளம் அமைப்பில் தடுப்பு சுவர், கரையின் மீது நடைபாதை அமைத்து குளத்தின் சுற்றுப்பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக மாநகராட்சி சார்பில் 'அம்ரூத்' திட்டத்தில் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புனரமைப்பு பணி துவக்க விழா நேற்று காலை குளக்கரையில் நடந்தது. மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் வாசுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூமி பூஜைக்குப் பின் உடனடியாக புனரமைப்பு பணி துவங்கியது.
அகற்றப்படுமா?
மூளிக்குளம் முழுவதும் தற்போது முழுமையாக ஆகாய தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் குளத்தில் தேங்கும் நீர் பெருமளவு இந்த தாவரத்தால் உறிஞ்சப்படுகிறது. கடந்தாண்டு இந்த குளம் முழுமையாக துார் வாரி, வண்டல் மண் அகற்றி ஆழப்படுத்தப்பட்டது. குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தும், மரக்கன்றுகள் நட்டும் சீரமைப்பு செய்யப்பட்டது.
இருப்பினும் மீண்டும் தண்ணீர் தேங்கத் துவங்கிய நிலையில், ஆகாய தாமரை அதிகளவில் முளைத்து, வளர்ந்து, பரவி, ஆக்கிரமித்துள்ளது.தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணியின் போது குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளும் அகற்றப்பட வேண்டும்.