தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில் போதிய நிதியில்லாத காரணத்தால், அதிக போக்குவரத்து கொண்ட 21 சாலைகளை, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 964 சாலைகள் உள்ளன. பல சாலைகள், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை பொறுத்தவரை, ஒரு இடத்தில் சாலை அமைக்கப்பட்டால், மீண்டும் சாலை அமைக்க சில ஆண்டுகள் ஆகும்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் ஆண்டுதோறும் பராமரிக்கப்படும். சாலையின் இருபுறத்திலும் கால்வாய் கட்டப்படுவதோடு, ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு, தாம்பரம் மாநகராட்சியில் அதிக போக்குவரத்து கொண்ட சில சாலைகளை, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, பல்லாவரம் தொகுதியில் உள்ள 21 சாலைகளை கணக்கிட்டு, அவற்றை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு கோப்பு அனுப்பப்படும். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், முறைப்படி 21 சாலைகளும் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
பம்மல் - நல்லதம்பி, பம்மல் - அண்ணா, பம்மல் - சங்கர் நகர் மெயின்ரோடு, அனகாபுத்துார் - மேட்டுத் தெரு, அனகாபுத்துார் - பம்ப் ஹவுஸ், சி.எல்.சி., திருநீர்மலை, திருநீர்மலை - சங்கர் நகர், திருநீர்மலை- குமாரசாமி, திருநீர்மலை- நாகப்பா நகர் 1வது குறுக்கு.
திருநீர்மலை- நாகப்பா நகர் 2வது குறுக்கு, திருநீர்மலை- நாகப்பா நகர் 3வது மெயின் ரோடு, - டி.என்.எச்.பி., திருநீர்மலை, பல்லாவரம்- அப்துல் பாருக் சாபிப், பல்லாவரம்- பி.வி.வைத்தியலிங்கம், குரோம்பேட்டை- அஸ்தினாபுரம் வினோபா நகர் 7வது தெரு.
குரோம்பேட்டை- ராதா நகர், குரோம்பேட்டை- சி.எல்.சி., ஒர்க்ஸ், குரோம்பேட்டை- வைஷ்ணவா கல்லுாரி, அஸ்தினாபுரம் பிரதான சாலை, அஸ்தினா புரம் மசூதி.