பல்லாவரம்:பல்லாவரம் - குன்றத்துார், பல்லாவரம் - திருநீர்மலை சாலைகளில் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பல்லாவரம் - குன்றத்துார் சாலையை ஒட்டி பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, இரண்டாம் கட்டளை, மணஞ்சேரி, கரைமா நகர், குன்றத்துார் ஆகிய பகுதிகள் உள்ளன.
கடும் நெரிசல்
இப்பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதனால், சாலையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இதேபோல், பல்லாவரம் - திருநீர்மலை சாலையை ஒட்டி, நாகல்கேணி தோல் தொழிற்சாலைகள், திருமுடிவாக்கம் சிப்காட் ஆகியவை உள்ளன. இதனால், தினசரி, ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான இலகு ரக வாகனங்களும் செல்கின்றன.
இதனால், 'பீக் ஹவர்' நேரத்தில், இரண்டு சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, இரண்டு சாலைகளையும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கோரிக்கையை ஏற்று, பல்லாவரம் - குன்றத்துார் சாலை, 'மேஜர் டிஸ்டிக் ரோடு' என்ற பிரிவில் இருந்து, தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, பூர்வாங்க பணிக்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதல்கட்ட பணிகள் நடந்தன.
ரூ.1 கோடி
இப்பிரச்னை குறித்து, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, சட்டசபையில் தொடர்ந்து பேசினார்.
இதையடுத்து, இந்த இரண்டு சாலைகளையும் நான்கு வழிப்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி கூறியதாவது:
இரண்டு சாலைகளையும் நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து, சட்டசபையில் தொடர்ந்து பேசி வருகிறேன். முதல்கட்ட பணிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின், அப்படியே தொய்வு ஏற்பட்டது.
தற்போது, இச்சாலைகளை நான்கு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.