காஞ்சிபுரம்:ரேஷன் கடை வாயிலாக, பொங்கல் பரிசு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முறைகேட்டை தடுக்க, பணத்திற்கு பதில் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் நிவாரண உதவி செலுத்தப்பட உள்ளது.
இதற்காக, தமிழகம் முழுதும், 2.23 கோடி கார்டுதாரர்களின் ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், லட்சக்கணக்கான கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கே இல்லாதது தெரியவந்துள்ளது.
இதனால், கார்டுதாரர்களின் ஆதார் மற்றும் பிற தகவல்களை பெற்று, அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்க, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வங்கி கணக்கு இருக்கும் கார்டுதாரர்களின் விவரங்களை ஆய்வு செய்ததில், ஆயிரக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வங்கி கணக்குடன் இணைக்காமலேயே உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், ஆதார் எண்களை, வங்கி கணக்குடன் இணைக்க, கார்டுதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து தாலுகாவில், 635 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்து, 74 ஆயிரத்து, 800 ரேஷன் அட்டைகள் உள்ளன.
இந்த அட்டைகளை ஆய்வு செய்ததில், காஞ்சிபுரம் தாலுகாவில், 8,415 பேரும், குன்றத்துார் தாலுகாவில், 10 ஆயிரத்து, 859 பேரும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 2,582 பேரும், உத்திரமேரூர் தாலுகாவில், 2,003 பேரும், வாலாஜாபாத் தாலுகாவில், 1,616 பேரும் என, மாவட்டத்தில் மொத்தம், 25 ஆயிரத்து, 475 பேர், வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களிடம், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க, ரேஷன் கடை விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.