திருநீர்மலை:திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக 8.17 கோடி ரூபாய் செலவில், 'ரோப் கார்' அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஜனவரியில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற, பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நின்ற கோலத்தில் நீர்வண்ணப் பெருமாள், கிடந்த கோலத்தில் ரங்கநாதர், சயன கோலத்தில் நரசிம்மர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என, நான்கு கோலங்களில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
நீர்வண்ணப் பெருமாள் மலையடிவாரத்திலும், ரங்கநாதர், சாந்த நரசிம்மர், உலகளந்த பெருமாள் மலைக்கோவிலிலும் காட்சியளிக்கின்றனர்.
சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் கட்டுக்கடங்காத நிலையில் காணப்படும்.
இக்கோவில் அமைந்துள்ள மலை, 48 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
கோவில் அடிவாரத்தில் குளம் உள்ளது. கீழ்ப்பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல, 288 படிக்கட்டுகள் உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளால் மலைக்கோவிலுக்குச் செல்ல முடியவில்லை.
இதனால், பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் வரை வாகனங்கள் செல்லும் வகையில், சாலை அமைக்க வேண்டும் அல்லது, 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சில மாதங்களுக்கு முன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இக்கோவிலில், 'ரோப் கார்' அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது, 8.17 கோடி ரூபாய் செலவில், 'ரோப் கார்' அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.இக்கோவில், நிதியாக 3 கோடி ரூபாய் உள்ளது.
அதனால், திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேவைப்படும் மீதி, 5 கோடி ரூபாயை, நன்கொடையாளர்கள் மூலம் பெறும் முயற்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாத இறுதிக்குள், போதிய நிதி கிடைத்து விடும் என கூறப்படுகிறது. அதனால், 2023 ஜனவரியில், 'ரோப் கார்' அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிட்டபடி பணிகள் துவங்கினால், மூன்று மாதத்தில் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 'ரோப் கார்' வசதி கொண்டு வரப்படும். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளதால், ரங்கநாதரின் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருநீர்மலையில் 'ரோப் கார்' அமைக்க வேண்டும் என, சட்டசபையில் நீண்ட நாட்களாக பேசி வருகிறேன். அத்துறை அமைச்சரும் ஆய்வு மேற்கொண்டார். இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஜனவரியில் பணிகள் துவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.
-இ.கருணாநிதி, தி.மு.க., - பல்லாவரம் எம்.எல். ஏ.,
'ரோப் கார்' திட்டத்தில், நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்படும். அதில், இரண்டு வாகனங்கள் மலையேறுவதற்கும், இரண்டு வாகனங்கள் மலையில் இருந்து கீழே இறங்கவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். கோவில் இன்னும் பிரபல மடையும். நிர்வாகத்திற்கு வருமானமும் கிடைக்கும்.
ரங்கநாத பெருமாள் கோவில் அடிவாரத்தில், பாழடைந்து கிடந்த ஊழியர்கள் குடியிருப்பு களை இடித்து விட்டு, 3 கோடி ரூபாய் செலவில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.இந்தப் பணியும் முடிந்தால், மேலும் சிறப்பாக அமையும்.