திருவாரூர்:வலங்கைமான் அருகே, முன் விரோதம் காரணமாக, பஞ்., தலைவரை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, வேப்பத்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், அரவூர் பஞ்., தலைவராக பதவி வகித்தார்.
இவருக்கு, மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர், 55. இவரது மகன் விஜய், 24; திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இரு குடும்பத்திற்கும் இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில், ஆத்திரமடைந்த விஜய், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, கொட்டையூர் மேட்டுச்சாலையில் நின்ற பன்னீர்செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த அரிவாளால், பன்னீர்செல்வத்தை, விஜய் வெட்டினார்.
படுகாயமடைந்த பஞ்., தலைவர், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நள்ளிரவு, 12:30 மணிக்கு இறந்தார்.
வலங்கைமான் போலீசார் விஜயை கைது செய்து விசாரிக்கின்றனர்.