தஞ்சாவூர்:திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம்பெண்ணைக் கொலை செய்து, வாய்க்காலில் உடலை வீசிய தனியார் பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மேல உளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா, 26; கல்லுாரி படிப்பு முடித்தவர். மாவட்ட மைய நுாலகத்திற்கு செல்வதற்காக, மேல உளூரில் இருந்து, தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் தினமும் சென்று வந்தார்.
கடந்த, 6ம் தேதி முதல் அவரை காணவில்லை; பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாக தகவல் வந்தது.
தஞ்சாவூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அவர் காணாமல் போன அகல்யா என்பது தெரிந்தது.
அவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். கடைசியாக தொடர்பு கொண்ட தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த நாகராஜ், 25, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்சில், டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேல உளூரில் இருந்து, தினமும் தஞ்சாவூருக்கு செல்லும் அகல்யாவுடன் மூன்று மாதங்களாக, அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். அதற்கு நாகராஜ் மறுத்து வந்தார். மேலும், நாகராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது அகல்யாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த, 6ம் தேதி அகல்யாவை, காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, துப்பட்டாவால் அகல்யா கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
அதே காரில், அவரது உடலை எடுத்து வந்து வாய்க்காலில் வீசியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நாகராஜை கைது செய்தனர்.