நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், திடீரென கட்டடத்தின் மேல் தளத்திற்கு ஏறும் 'வீடியோ' சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கடந்த 6ம் தேதி, கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்காட்டாங்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுது நீக்கம் பணி நடைபெறுவதை ஆய்வு செய்தார்.
பள்ளி கட்டடம் பழுது நீக்கப்பட்டு, கண் கூசும் வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டு இருப்பதை பார்த்த கலெக்டர், 'மாணவர்களை கவரும் விதத்தில் வர்ணம் பூசக்கூடாதா?' எனக், கேட்டார்.
கட்டடத்தின் உள்ளே சென்று மேல் கூரையை ஆய்வு செய்தார்.
ஒரு இடத்தில் நீர்க்கசிவு இருப்பதை பார்த்து, 'மேல்தளத்தில் தட்டு ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளதா?' எனக், கேட்டார்.
பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள், தட்டு ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏணியை எடுத்து வரக் கூறிய கலெக்டர், அதில் ஏறிச் சென்று, மேல்தளத்தை ஆய்வு செய்தார்.
மேல்தளத்தில் மரத்தின் இலைகள் குப்பையாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சீரமைப்பு பணியை முறையாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.