பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், தா.பழூர் அருகே, போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயி, மருத்துவமனையில் உயிரிழந்ததை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரியலுார் கலெக்டர் அலுவலகம் முன், பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம், அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், அரியலுார் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்ற போது, அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது புகார்படி, விக்கிரமங்கலம் போலீசார் அருண்குமார், 30, உட்பட ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.
கடந்த 25ம் தேதி, அருண்குமாரை கைது செய்வதற்காக சென்ற போலீசாருடன், அருண்குமாரின் மாமனார் செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகியோர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில், போலீசார் தாக்கியதாக கூறி, செம்புலிங்கம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவசாயி செம்புலிங்கம் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியலுார் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.