தென்காசி:தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் ''குற்றாலத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு 15 நிமிடத்தில் வந்து விடலாம். நான் வர ஒன்றரை மணி நேரம் ஆனது. காரணம் வழியெங்கும் மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என வாழ்த்தியதுதான்,'' என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ. 22 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 57 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ. 34 கோடியே 14 லட்சம் மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 182 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் புலிதேவன் மணிமண்டபம், சிலை அமைத்துக் கொடுத்ததும், அவரது தளபதி ஒண்டிவீரனின் மணி மண்டபத்திற்கு நிதி ஒதுக்கியதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். 500 ஆண்டுகளுக்கு முந்தைய தென்காசி கோயில் ராஜகோபுரத்தை மீண்டும் புதுப்பிக்க 1960களில் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜன் தலைமையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது. 1990 ஜூன் 25ல் தி.மு.க., ஆட்சியில் ராஜகோபுர கும்பாபிேஷகம் நடந்தது.
தற்போது நடப்பது அரசு விழாவா எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு மக்கள் வந்துள்ளனர்.
தென்காசியை சேர்ந்த மாணவி சண்முகவள்ளி 2020ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் அகில இந்திய அளவில் 108 வது இடத்தையும் தமிழக அளவில் 3வது இடத்திலும் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று தென்காசிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை பாராட்டுகிறேன். வினைதீர்த்தநாடார் பட்டியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி ஆராதனா தாம் பயிலும் அரசு பள்ளிக்கு கட்டட வசதி கேட்டு எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது நம்பிக்கையை பாராட்டுகிறேன்.
முதல் கட்டமாக அவரது பள்ளிக்கு ரூ. 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மேலநீலிதநல்லுார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தனி அலுவலர் நியமித்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் இந்த அரசு எதையுமே செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார். குற்றாலத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு 15 நிமிடத்தில் வந்து விடலாம். ஆனால் நான் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. காரணம் வழியெங்கும் பொதுமக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என வாழ்த்தினர் என்றார். தென்காசி மாவட்டத்திற்கு பல திட்டங்களை அறிவித்தார்.
தென்காசி வட்டாரத்தில் அரசு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதிக கூட்டம் காண்பிப்பதற்காகஅரசு பள்ளி மாணவிகள் தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கும் பயனாளிகள் என ஸ்டிக்கர் தரப்பட்டு பின்பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலினுடன் மனைவி துர்கா வந்திருந்தார். அவர் காலை 10:15 மணிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றார். ஸ்டாலின், தன் பெயருக்கு அர்ச்சனை செய்தார். 11:00 மணிக்கு கிளம்பி கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலிலும் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் துர்கா அங்கு வரவில்லை. வழக்கமாக பகல் 12:15க்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். ஆனால் துர்கா வருகைக்காக நேற்று பகலில் சங்கரன்கோவில் நடை அடைக்கப்படவில்லை.
ஆண்டாள் கோயிலில் துர்கா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
நேற்றிரவு 7:16 மணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் காரில் துர்கா, கோயில் ஆடிப்பூர பந்தலுக்கு வந்தார். செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள் வரவேற்றனர்.