கோவை;கோவைக்கு நாளை வரும் தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மத நல்லிணக்கம் தொடர்பான செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, பதட்டமான சூழல் ஏற்பட்டது. மதநல்லிணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஹிந்து இயக்கங்களின் நிர்வாகிகளுடன் கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதேபோல், அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடனும் அரசு தரப்பில் பேச்சு நடத்தி கருத்துக்கள் அறியப்பட்டன. மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், அடிப்படைவாத சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்தும் முயற்சிகளை தொடங்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நாளை கோவை வருகிறார். அவர், மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடக்கும் நிகழ்ச்சியிலும், போலீஸ் ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.