கூடலுார்:கூடலுாரில், 18 நாட்கள் தேடுதலுக்கு பின் 'அரிசிராஜா' என்றழைக்கப்படும் மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் 'பி.எம்-2' என்ற மக்னா யானை, 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன், இருவரை தாக்கி கொன்றது. இதையடுத்து, நான்கு கும்கி யானைகள் உதவியுடன், 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், கடந்த, 20ம் தேதி முதல் தேவாலா, வாச்சிகொல்லி பகுதிகளில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், வாச்சிகொல்லி அருகே நள்ளிரவு, 12:30 மணிக்கு, தேவாலா வாழவயல் பகுதியில் காளிமுத்து என்பவர் வீட்டை சேதப்படுத்தி, உள்ளே இருந்த அரிசியை உட்கொண்டது. வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த சிலம்பாபி, பவளக்கொடி ஆகியோர் பின் வாசல் வழியாக தப்பினர். வனத்துறையினர் வந்து யானையை விரட்டினர்.
நேற்று காலை, 7:00 மணி முதல் கும்கி யானைகள் உதவியுடன், உதவி வன பாதுகாப்பாளர் கருப்பையா, முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர், 'டிரோன்' மூலம் யானையை தேடும் பணியை மேற்கொண்டனர்.
மதியம், 1:00க்கு புளியாம்பாறை அருகே உள்ள மைய கொல்லி வனப்பகுதியில் யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. கால்நடை டாக்டர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும், 300 மீட்டர் துாரம் சென்று நின்றது. தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன், 'அரிசிராஜா' யானையை கட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட பகுதிக்கு லாரி செல்ல சாலை வசதி இல்லை. இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன், அந்த யானையை அழைத்து வந்து, லாரியில் ஏற்றி முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.