கோத்தகிரி;'கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை வாங்க மறுக்கும் தனியார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,' என, விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், குன்னுார் 'இன்கோசர்வ்' அலுவலகத்தில், அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்ட நடந்தது.
இதில், வியாபாரிகள் புரோக்கர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'பசுந்தேயிலைக்கு, குறைந்த பட்சம், 25 ரூபாய் விலை வழங்க வேண்டும்; விவசாயிகள் வினியோகிக்கும் ஒரு அரும்பு, இரு இலை மற்றும் சற்று முதிர்ந்த கரட்டு இலையை தொழிற்சாலைகள் கண்டிப்பாக கொள்முதல் செய்யவேண்டும்,' என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கீழ் கோத்தகிரி மற்றும் அஜ்ஜூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும், 15 தனியார் தேயிலை தொழிற்சாலைகளில், 'ஒரு அரும்புடன், இரு இலை இருந்தால் மட்டுமே, கொள்முதல் செய்வோம்,' எனக் கூறி, விவசாயிகளிடம் இருந்து, பசுந்தேயிலையை வாங்க மறுக்கின்றனர். இதனை விவசாயிகள் கண்டித்துள்ளனர்.
மலை மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''ஆலோசனை கூட்டத்தில் நடந்த முடிவிற்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகம் மற்றும் தேயிலை வாரியம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும்,''என்றார்.