மதுரை,--மதுரை மாநகராட்சி வார்டு 2 அசோக்நகரில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால்பொதுமக்கள் பல ஆண்டுகளாக தவிப்புடன் வசிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி வார்டு 2, கூடல்நகரில் உள்ளது அசோக்நகர். பிரதான ரோட்டில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெயரிடப்படாத 6 தெருக்களில் பலநுாறு குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி உருவானது முதல் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி உள்ளது. இங்கு வசிப்போர் பலமுறை மாநகராட்சியில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தவியாய் தவிக்கின்றனர்.
இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர்சங்கர நாராயணன், செயலாளர் குமரேசன், பொருளாளர் முரளி கூறியதாவது:
முதல் தெருவில் பல ஆண்டுகளாக சீரமைக்காததால் ரோடு பள்ளம், மேடாக இருப்பதுடன்,அதில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடக்கிறது. கண்மாய்க்கு தடுப்புச் சுவர், பொதுமக்களுக்கு குடிநீர் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால்ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர்.
குடிநீருக்கென வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுத்து பல மாதங்களாகி விட்டது. அதில் குடிநீர் வராததால் விலைக்கு வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு பராமரிப்பற்று கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் பெருகி நோய் பரப்ப பறந்து திரிகின்றன. இவைதவிர தெரு நாய்களாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
போதாத குறைக்கு புதர் மண்டிக் கிடக்கும் சிறுவர்பூங்காவில் கும்மாளமிடும் குடிமகன்கள், மதுபாட்டில்களை அப்படியே போட்டுச் செல்கின்றனர். பூட்டிக் கிடக்கும் பூங்காவில் உபகரணங்கள் துருப்பிடித்து கிடக்கின்றன.
கரிசல்குளம் கண்மாய் நிரம்பினால் இப்பகுதி தண்ணீரில் மிதக்கும் தனித்தீவாக மாறி விடும். புதர்களில் இருந்து அதிக அளவில் பாம்புகள் படையெடுக்கின்றன. இதனை தடுக்க கண்மாயில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.