மதுரை,-கடந்தாண்டு தமிழக பட்ஜெட்டில் மதுரையில்முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை முருங்கை விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
மதுரை, திண்டுக்கல், தேனி, அரியலுார், திருப்பூர், கரூர், துாத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு ஏற்றுமதி மண்டலமாக மதுரையில் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை விவசாயிகளுக்காக எந்த முயற்சியும்செய்யவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அவர்கள் கூறியதாவது:
கண்துடைப்புவேலை கணக்கில் சேராது
பாண்டியன், உசிலம்பட்டி: 2 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்தேன். அவ்வப்போது கூட்டம் நடத்தி அதிகாரிகள் பேசுகின்றனர். ஏற்றுமதி மண்டலம் அமைவதற்கான எந்த முயற்சியும் இல்லை. விவசாயிகளுக்கு முருங்கை இலையைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இயற்கை விவசாயம் செய்வதென்றால் சுற்றியுள்ள 50 ஏக்கரும் நஞ்சில்லா பூமியாக இருக்க வேண்டும். ரசாயன உரம் பயன்படுத்தக்கூடாது.
ரசாயன உரத்திற்கு பதிலாக தரமான இயற்கை உரத்தை பரிந்துரைக்க வேண்டும். முருங்கை இலைக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். வருமானம் குறைந்தால்விவசாயி சாகுபடி செய்ய முடியாது. தரமான முருங்கை மரக்கன்றுகளை அரசே உற்பத்தி செய்ய வேண்டும்.
முருங்கையில் பூச்சி தாக்குதலை இயற்கை பூச்சிகொல்லியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தற்போது 2 ஏக்கரையும் மல்லிகை விவசாயமாக மாற்றிவிட்டேன். அரசு எல்லா உதவிகளையும் செய்யும் போது மீண்டும் முருங்கை விவசாயத்திற்கு மாறுவேன்.
சாகுபடிக்கு முறையான வழிகாட்டுதல் தேவை
அகிலன், உசிலம்பட்டி: 3 ஏக்கரில் முருங்கைக்காய், ஒரு ஏக்கரில் முருங்கை இலை உற்பத்தி செய்கிறேன். 6 மாதத்திற்கு முன் அண்ணாநகர் உழவர் சந்தையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தினர். நாங்களும் சென்றோம். ஆர்கானிக் விவசாயத்தை வலியுறுத்தினர். இயற்கை விவசாயம் செய்தாலும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைக்காரர்கள் சொல்லும் மருந்தை தான் தெளிக்கின்றோம்.
எவ்வளவு மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை கடைக்கார பிரதிநிதிகள் தான் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.எந்த மாதம் முருங்கையை கவாத்து செய்ய வேண்டும், மருந்துகள் எவ்வளவு என்பதை வேளாண் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
மதுரை, தேனியில் முருங்கை உற்பத்தி அதிகமாகியுள்ளது. மழைக்காலத்தில் பூக்கள் அதிகம் உதிர்கிறது. சீசன் நேரத்தில் முருங்கை கிலோ ரூ.7க்கு தான் விற்பனையாகிறது. தற்போது ரூ.200 வரை விலைபோகிறது. காய் உற்பத்தியே இல்லை. எனவே ஆப்சீசனில் காய் உற்பத்திக்கு வழிகாட்ட வேண்டும். இயற்கை உரங்களுக்கு அதிகம் செலவாகிறது.
நாட்டுமாடுகள் மூலம் பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் தயாரித்தேன். தொடர்ந்து செய்ய ஆட்கள் இல்லை. நாங்கள் குழுவாக சேர்ந்து செயல்படவும் வழியில்லை. இயற்கை உரங்களை வேளாண் துறை, வேளாண் பல்கலை மூலம் உற்பத்தி செய்தால்குறைந்த விலைக்கு விவசாயிகள் வாங்க முடியும்.