மதுரை,-சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் கோயில் அருகே கழிப்பறை அமைக்க தடை கோரிய வழக்கில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சோழவந்தான் ஹிந்து முன்னணி துணைத் தலைவர் தனசேகரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் வட்டப்பிள்ளையார் கோயில் மற்றும் சனீஸ்வரன் கோயில் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை அமைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது இவ்வழியாக பக்தர்கள் சென்றுவருவர்.
வைகாசி திருவிழாவின்போது அதிக பக்தர்கள் கூடுவர். கழிப்பறை அமைப்பதால் பக்தர்கள் சென்றுவர இடையூறு ஏற்படும். வைகை மாசுபடும்.ஏற்கனவே அப்பகுதியில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி, பயனற்ற நிலையில் உள்ளன. புதிய கழிப்பறை கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தனசேகரன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார்அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: அப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துகின்றனர். மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணி நிறைவடையும் தருவாயில் மனுதாரர் தனிப்பட்ட உள்நோக்கில் மனு செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இவ்வழக்கில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது. அவர் கழிப்பறை அமைப்பதால் வைகை ஆற்றிற்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்து டிச.,14ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.