வாடிப்பட்டி--வாடிப்பட்டி பகுதியில் தொடர்மழையால் மரவள்ளிக் கிழங்கு அழுகி, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி பகுதியில் கிணற்று பாசனம் மற்றும்மானாவாரி பகுதியில் பயறு வகைகள், மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் அறுவடைக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்திய மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதில் மண்ணுக்குள் விளைந்த மரவள்ளி கிழங்கு அழுகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளில் மழை பொய்த்தும், இப்போது மழையாலும் பாதிப்பை சந்தித்த விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர்.
விவசாயி மூர்த்தி கூறியதாவது: குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இம்முறை 2 ஏக்கரில் பயிரிட்ட கிழங்கு மழைக்கு அழுகியதால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிழங்கு வியாபாரியிடம் வாங்கிய கடனுக்காக மேடான பகுதியில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதற்காக 25 சென்ட் தவிர்த்து, மற்ற பகுதிகளில் செடிகளை அழித்து மீண்டும்கடன் வாங்கி நெல் நடவு பணியை துவக்கி உள்ளேன். இங்கு மழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.