தென்காசி : ''தற்போது நடப்பது அரசு விழாவா... எங்கள் கட்சியின் மாநில மாநாடா... என்று சந்தேகப்படும் அளவிற்கு மக்கள் வந்துள்ளனர்,'' என, தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வியந்து பேசினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் புலிதேவன் மணிமண்டபம், சிலை அமைத்துக் கொடுத்ததும், அவரது படை தளபதி ஒண்டிவீரனின் மணி மண்டபத்திற்கு நிதி ஒதுக்கியதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.
பழமையான, 500 ஆண்டுகளுக்கு முந்தைய தென்காசி கோவில் ராஜகோபுரத்தை மீண்டும் புதுப்பிக்க 1960களில் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜன் தலைமையில் முயற்சி நடந்தது. 1990 ஜூன் 25ல் தி.மு.க., ஆட்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி தலைமையில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது நடப்பது அரசு விழாவா எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு மக்கள் வந்துள்ளனர்.
தென்காசி மாணவி சண்முகவள்ளி, 2020ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் அகில இந்திய அளவில் 108வது இடம், தமிழக அளவில் 3வது இடம், பெண்கள் பிரிவில் முதல் இடம் பெற்று தென்காசிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரைப் பாராட்டுகிறேன்.
வினைதீர்த்தநாடார் பட்டியைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி ஆராதனா, தாம் பயிலும் அரசு பள்ளிக்கு கட்டட வசதி கேட்டு எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது நம்பிக்கையை பாராட்டுகிறேன்.
முதல் கட்டமாக அவரது பள்ளிக்கு 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு எதையுமே செய்யவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், 'இந்த ஆட்சி தொடர வேண்டும்' என, வழியெங்கும் பொதுமக்கள் வாழ்த்தினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கலெக்டர் ஆகாஷ், எம்.எல்.ஏக்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, காலை 10:15 மணிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு அவர் கணவர் ஸ்டாலின் பெயருக்கு அர்ச்சனை செய்தார். பின், 11:00 மணிக்கு, கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். மாணவியர் கூட்டம்: ஏற்கனவே, போக்குவரத்து நெருக்கடியான ஊர் தென்காசி. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி போக்குவரத்து முறைப்படுத்தப்படவில்லை. திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்களை மத்தளம்பாறை வழியாக திருப்பிவிட்டனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டது.