சேலம், டிச. 9-
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை இயக்க திட்டத்தில், 95 சதவீத மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழகத்தில் வனப்பகுதி பரப்பு, நாட்டு மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க, பசுமை இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள வனச்சரகம் சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த மரக்கன்றுகள் நடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் கோட்டத்தில் உள்ள சேர்வராயன் தெற்கு, வடக்கு, ஏற்காடு உள்ளிட்ட வனச்சரக அலுவலகத்தில், சமூக காடுகள் பிரிவு அலுவலகம் உள்பட, 13 இடங்களில், 4.29 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு பணி கடந்த ஏப்ரலில் தொடங்கியது.
அதேபோல் ஆத்துார் வன கோட்டத்தில், 11 இடங்களில், 5.39 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன.
அதில் தேக்கு, செம்மரம், நாவல், பூவரசு, வேம்பு, புங்கன் மரக்கன்றுகள் அடங்கும். கடந்த அக்டோபரில், கன்று நடும் பணி தொடங்கியது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் செடிகளுக்கு ஆவணங்கள் பெறப்பட்டன.
மேலும் வனப்பகுதி, ஏரி, கல்வி நிலையம், கோவில் மைதானங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணி, 95 சதவீதம் முடிந்துள்ளது. மீதி செடிகள் இந்த மாதத்தில் நட்டு முடிக்கப்படும். இதனிடையே நடப்பட்ட மரக்கன்றுகள் எப்படி உள்ளது என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.