செய்திகள் சில வரிகளில் .. சேலம் | சேலம் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில் .. சேலம்
Added : டிச 09, 2022 | |
Advertisement
 


ஜி.ெஹச்., டீன் பொறுப்பேற்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி ஈரோட்டுக்கும், அங்கு பணிபுரிந்த மணி சேலத்துக்கும் இடமாற்றப்பட்டனர். நேற்று சேலம் அரசு மருத்துவமனையின் புது டீனாக மணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
ஆத்துார்: ஆத்துார் அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம், தனியார் கல்லுாரி சார்பில், எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம், பேரணி நேற்று நடந்தது. ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி, எய்ட்ஸ் நோய் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை குறித்து பேசினார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் வரை, கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, ரோட்டரி சங்க தலைவர் செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
700 கால்நடைகளுக்கு சிகிச்சை
தலைவாசல்: சதாசிவபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், 700 கால்நடைகளுக்கு, செயற்கை கருவூட்டல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. உதவி இயக்குனர் முருகவேல், மருத்துவர்கள் பங்கேற்றனர்.
வெல்ல ஏலத்தில் 2,500 சிப்பம்
சேலம்: செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டியில் வெல்ல ஏலம் நேற்று நடந்தது. ஓமலுார், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 40 வண்டிகளில், 2,500 சிப்பம்(ஒரு சிப்பம் - 30 கிலோ) கொண்டு வரப்பட்டது. உருண்டை வெல்ல சிப்பம், 1,200 முதல், 1,240 ரூபாய், அச்சுவெல்லம், 1,250 முதல், 1,350 ரூபாய், நாட்டு சர்க்கரை, 1,220 ரூபாய்க்கு விற்பனையானது.
கலைக்குழு மூலம் விழிப்புணர்வு
ஆத்துார்: சேலம் மாவட்ட மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று, போலி மது, கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, கலைக்குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா தொடங்கி வைத்தார். கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுவால் ஏற்படும் பிரச்னை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

காங்., செயல் தலைவர்
நீதிமன்றத்தில் ஆஜர்
சேலம், டிச. 9-
சேலத்தில், மாநகர காங்., சார்பில், 2016ல் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. காங்., செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 1ல் நடக்கிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, மோகன் குமாரமங்கலம் நேரில் ஆஜரானார். மீண்டும், 15க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் 16ல் பொதுக்கூட்டம்
தி.மு.க.,வினருக்கு அறிவுரை
சேலம், டிச. 9-
தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சுபாசு, மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
அதில், மறைந்த அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கட்சியினர் நிகழ்ச்சி நடத்த வேண்டும்; வரும், 16ல் கோட்டையில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்பதால் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர செயலர் ரகுபதி, பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நினைவு ஜோதிக்கு வரவேற்பு
ஆத்துார், டிச. 9-
அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் வரும், 13 முதல், 16 வரை, கேரளா, திருச்சூரில், 35வது தேசிய மாநாடு நடக்க உள்ளது. அதையொட்டி வீரவெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயண குழு நேற்று ஆத்துார் வந்தது. அப்போது விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பு, ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மாநில தலைவர் சண்முகம், பொதுச்செயலர் நடராஜன், ஆத்துார் வட்டார தலைவர் மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் தெலுங்கானா தியாகிகள் நினைவு ஜோதி, நேற்று ஓமலுார் வந்தது. தமிழக விவசாய சங்க வட்டார தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு, சி.பி.எம்., மாவட்ட செயலர் சண்முகராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்காட்டை ரசித்தவர்களால்
நடப்பாண்டு ரூ.56 லட்சம் வசூல்
சேலம், டிச. 9-
ஏற்காட்டுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், அண்ணா பூங்கா, படகு இல்லம், பக்கோடா பாயின்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்கின்றனர். அண்ணா பூங்கா, ஏற்காடு பூங்கா, ஏரி பூங்கா, அரசு தாவரவியல் பூங்காவில், நுழைவு கட்டணமாக, சிறுவருக்கு, 5, பெரியவருக்கு, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை, அண்ணா, ஏரி, அரசு தாவரவியல், அரசு மரபியல் ரோஜா பூங்காக்களை, 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்தனர். இதன்மூலம், 56 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

5 தனியார் பஸ்கள் மீது வழக்கு
ஆத்துார்: ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் மோட்டார் வாகன அலுவலர்கள், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் பகுதிகளில், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் வழியே சென்ற, 5 தனியார் பஸ்கள் மீது வழக்கு பதிவு செய்து, கலெக்டரின் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.
மரம் முறிந்து சாலையில் விழுந்தது
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதல் வானிலை மந்தமாக காணப்பட்டது. சுற்றுலா பயணியர் குறைந்த அளவிலேயே இருந்தனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. தொடர்ந்து மதியம் முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. மாலையில் பலத்த காற்று வீசியது. அப்போது, படகு இல்ல நுழைவாயில் எதிரே இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது, மக்கள், வாகனங்கள் சாலையில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின் சாலையில் விழுந்த மரத்தை படகு இல்ல பணியாளர்கள், மக்களுடன் இணைந்து அப்புறப்படுத்தினர்.
குன்றக்குடிக்கு பட்டறிவு பயணம்
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் வட்டார விவசாயிகள், வேளாண் உழவர் நலத்துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மூலம், மானாவாரி வேளாண்மையில் புது சாகுபடி தொழில்நுட்பம் அறிய, குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, 3 நாள் பயணமாக நேற்று விவசாயிகள் புறப்பட்டனர். இந்த பட்டறிவு பயணத்தை, வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி, அறிவுரை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
அலுவலர்களுக்கு பயிற்சி
ஓமலுார்: ஓமலுார் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார அளவில் அலுவலர்களுக்கு, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. மாவட்ட திட்டக்குழு அலுவலர் சேகர் தலைமை வகித்தார். அதில், சேலம் மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்பட, 17 வித இலக்குகளை அடைய தேவையான புள்ளி விபரங்களை எவ்வாறு பெற வேண்டும் என பயிற்சி அளித்தார்.
எம்.எல்.ஏ., ஆலோசனை
காடையாம்பட்டி: தி.மு.க., அரசின் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதனால், காடையாம்பட்டியில் ஒன்றிய செயலர் சுப்ரமணி தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, பல்வேறு ஆலோசனை கூறினார்.
2 குழந்தை தொழிலாளர் மீட்பு

சேலம், டிச. 9-
சேலம், தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி(அமலாக்கம்) அறிக்கை:
சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி பட்டறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 18 வயதுக்கு குறைவாக இருந்த, குழந்தை தொழிலாளர், 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை பணி அமர்த்திய நிறுவனங்களின் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் சட்டத்தில், குழந்தைகள், வளரினம் பருவத்தொழிலாளர்கள் யாரையும் பணி அமர்த்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. தவறினால், நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்மூலம் குறைந்தபட்சம், 6 மாதம் முதல், 2 ஆண்டு வரை சிறை தண்டனை, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இதுகுறித்த புகாரை, 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தெரிவிக்கலாம்.
உதயநிதி பிறந்தநாள்
பிரியாணி வழங்கல்
இடைப்பாடி, டிச. 9-
எம்.எல்.ஏ., உதயநிதி பிறந்தநாளையொட்டி, இடைப்பாடியில் சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தலைமை வகித்தார். தி.மு.க.,வின், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, மக்களுக்கு மஞ்சப்பை, பிரியாணி மட்டுமின்றி, மரக்கன்றுகளையும் வழங்கினார். 1,500க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சப்பை, பிரியாணி, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
குஜராத்தில் பா.ஜ., வெற்றி
சேலத்தில் கொண்டாட்டம்
சேலம், டிச. 9-
குஜராத் சட்டசபை தேர்தலில், தொடர்ந்து, 7ம் முறை பா.ஜ., வெற்றி பெற்றதால், சேலம், மரவனேரியில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து, அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பேரணியாக வந்தனர். சேலம் அம்பேத்கர் வளைவு அருகே, துணைத்தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமையில் கட்சியினர், பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
தனியார் நிறுவன ஊழியரிடம்
சங்கிலி, பணம் பறித்தவர் கைது
சேலம், டிச. 9-
சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் பால்ராஜ், 25. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று காலை, மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், பால்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 3 பவுன் தங்க சங்கிலி, 2,700 ரூபாயை பறித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டது, மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த ரவுடி மாதேஷ், 26, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பணம், நகையை மீட்டனர்.
வரும் 13ல் ஆத்துாரில்
அ.தி.மு.க.,
ஆர்ப்பாட்டம்
ஆத்துார், டிச. 9-
அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்டம் முழுதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன்படி, டிச., 9(இன்று) காலை, 10:00 மணிக்கு டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 13ல் நகராட்சி, 14ல் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. 13ல் ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன் நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டன உரையாற்றுகிறார். அதனால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். நாளை இளைஞர் திருவிழா
சேலம், டிச. 9-

மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வரும், 10ல் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடக்க உள்ளது. அதில் அரசுத்துறை சார்பில் பல்வேறு பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இளைஞர் விழாவில், 18 வயது முதல், 45 வயது வரையான படித்த, படிக்காத ஆண், பெண், திருநங்கையர் பங்கேற்கலாம். அவர்களுக்கு தேவையான கட்டணமில்லா பயிற்சியை தேர்வு செய்து, பிரபல தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறலாம். பயிற்சி காலத்தில் தேவையான உபகரணம், பயிற்சி கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி, இதர மதிப்பு கூட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி நிறைவில், மத்திய - மாநில அரசு சான்றிதழ், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதனால் மகுடஞ்சாவடி அதன் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் பயன்பெறலாம் என, மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அய்யனாரப்பன் கோவிலில்
பச்சை போடும் விழா
இடைப்பாடி, டிச. 9-
இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள வன்னியர் குல ஷத்திரிய மகாஜனங்கள், அய்யனாரப்பன் கோவில் பங்காளிகள் பச்சை போடும் விழா நடந்தது. கோவில் வீட்டில் இருந்து அனைத்து பங்காளிகள் ஒன்று கூடி பதிக்கு சென்று, குலதெய்வமான உளுந்துார்பேட்டை அய்யனாரப்பனுக்கு பச்சைபோடும் விழா நடந்தது.
குலதெய்வமான பூரணி, பொற்பலை சமேத அய்யனாரப்பன், வீரக்காரன், புடவைக்காரி உள்ளிட்ட பரிவார தெய்வப்பதிகளுக்கு பூஜை செய்து தீபாராதனை நடந்தது. மேலும் வைகாசியில் தெவம் நடத்த ஆலோசனை செய்தனர். இந்த விழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தகவலை கோவில் பூசாரி மணி தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X